சென்னை:குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களில் எவரேனும் தமிழர்கள் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தகவல் அறிந்ததும், விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிவுறுத்தலின்படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.