தஞ்சாவூர்:கடந்த ஜூலை மாதம் சட்டத்துக்குப் புறம்பாக மைனர் ஜோடியை தங்க அனுமதித்து, அதில் சிறுமி உயிரிழப்புக்குக் காரணமான தனியார் தங்கும் விடுதிக்கு கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் முன்னிலையில் கும்பகோணம் வட்டாட்சியர் சண்முகம் பூட்டி சீல் வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மோதிலால் தெருவில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் உறவினர்களான பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவனும், 17 வயது கல்லூரி மாணவியும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இச்சம்பவ நேரத்தில் கண்காணிப்பு கேமரா அணைத்து வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அதையடுத்து, இந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையிலும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கியதால் இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியரால் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அன்று விளக்கம் கோரப்பட்டது.