தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சியில் திமுக பெரும்பான்மை பலம் பெற்றிருந்த போதும், திமுக தலைமை கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேண்டுகோளின் படி, 2 மாமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும் காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மேயர் பதவியை அளித்ததால், 17வது வட்ட மாமன்ற உறுப்பினர் க சரவணன் (காங்) மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சமீபகாலமாக இவர்கள் இருவர் இடையிலான மோதல் வலுத்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி புதன் கிழமை நடைபெற்ற கும்பகோணம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ரூபாய் 2 கோடியே 2 லட்சத்து 68 ஆயிரத்து 435 மதிப்பிலான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 11 தீர்மானங்களை கூட்டத்தில் மேயர் விவாத பொருளாக வைக்காத நிலையில், இதனை வைக்காததன் காரணத்தை கேட்டும், அதனை நிறைவேற்றிட துணை மேயர் மற்றும் திமுக உறுப்பினர்கள் பலர் எழுந்து ஆவேசமாக பேசிய நிர்பந்தித்துள்ளனர்.
அப்போது இந்த பொருள்கள் குறித்து ஆய்வு செய்த பின்பு தான் கூட்டத்தில் வைக்க முடியும் என்று கூறிவிட்டு, கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவித்து மேயர் சரவணன் எழுந்து சென்றார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மேயர் கே.சரவணன் தலைமையிலான மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஆணையர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த பத்ம குமரேசன், ஆதிலட்சுமி ராமமூர்த்தி மற்றும் கௌசல்யா ஆகிய 3 மாமன்ற உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியை சார்ந்த ஒரே உறுப்பினரான செல்வம் ஆகிய 4 மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் இதில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.