தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழ் சமூகம் கேள்விப்படாத பாலியல் சம்பவங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் நடக்கிறது" - கிருஷ்ணசாமி வேதனை! - TAMIL NADU SEXUAL ASSAULT CASE

தமிழ் சமூகம் இதுவரை அறிந்திடாத பாலியல் குற்றங்களெல்லாம் தமிழ்நாட்டில் நடந்து வருவதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணசாமி பேட்டி
கிருஷ்ணசாமி பேட்டி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2025, 9:55 PM IST

தூத்துக்குடி: புதிய தமிழகம் கட்சி சார்பில் இட ஒதுக்கீடு, மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு கட்சியினர் மத்தியில் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு பட்டியல் பிரிவு மக்களுக்கு வழங்கப்பட்ட 18 சதவிகித இட ஒதுக்கீட்டை அனைத்து சமுதாய மக்களுக்கும் பிரித்து அளிக்கப்பட்டால் பட்டியல் பிரிவு மக்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். பட்டியல் பிரிவு மக்களுக்கு உள் ஒதுக்கீடு சம்பந்தமாக எந்த ஒரு பாகுபாடும் காட்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால் இதனை சமூக நீதி, திராவிடம் என்று சொல்லக்கூடிய திமுகவினர் கடைப்பிடித்த மாதிரி தெரியவில்லை. பட்டியலின மக்களுக்கு வழங்கிய 18 சதவிகித இட ஒதுக்கீட்டை தொடக்கூடாது. இது சம்பந்தமாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியினர் இடையே கருத்தரங்கு நடத்த உள்ளோம்.

மாஞ்சோலை மக்கள் விவகாரம்

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் மக்களால் இந்த வனம் உருவானது. அப்பகுதி மக்கள் புலி, யானை, சிறுத்தை போன்ற மிருகங்களிடம் வாழ பழகிவிட்டார்கள். அது மட்டுமல்ல, இந்தியாவில் 30 சதவிகித மக்கள் மலைப்பகுதியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் இந்த மாஞ்சோலை மக்களை கண்டுகொள்ளவில்லை.

புதிய கல்விக் கொள்கை

எந்த அடிப்படையில் கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது எனவும், தமிழ்நாடு அரசு இதனை எதிர்க்க என்ன காரணம் என்பதையும் கூற வேண்டும்.

பாலியல் குற்றங்கள்

தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிற்கு இருக்கிறது. சமீபத்திய பாலியல் சம்பவங்கள் புதிய செய்தியாக உள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்ற விஷயங்களை நான் கேள்விப்பட்டது இல்லை. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்களுக்கு சாப்பாடு இருக்கிறதோ இல்லையோ, பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது'' என்று கிருஷ்ணசாமி கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details