திருநெல்வேலி:தென் மாவட்டங்களில் அமைதி நிலவ சிறப்பு குழுவை நியமனம் செய்து, அமைதி ஏற்பட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி, வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒரு பகுதி முன்னேற வேண்டுமென்றால், அந்தப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும். தென் மாவட்டங்களில் அரை நூற்றாண்டு காலமாகவே சாதிய மோதல்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, வணிகம் உள்ளிட்டவற்றில் தென்மாவட்டம் பின்தங்கி உள்ளது.
தென் மாவட்டங்களில் நடைபெறும் சாதியக் கொலைகள் சட்டம் ஒழுங்கு என்பதைத் தாண்டி, சமூக ஒழுக்கம், சமூகக் கட்டுப்பாடு, சமூக சீரழிவு என்று பார்வையில் இந்த விஷயத்தை அணுக வேண்டும். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்திருக்கிறது என்பது புள்ளிவிவரம் மூலம் தெரிய வருகிறது.
இது அந்த பகுதிகள், எந்த அளவிற்கு அமைதியற்ற சூழலில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் அண்மைக் காலங்களில் கூலிப்படை கலாச்சாரம் புதிதாக நிலை கொண்டு உள்ளது. முன்னதாக, நெல்லை காங்கிரஸ் கட்சித் தலைவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
அச்சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள், மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பட்டப்பகலில் தீபக் ராஜா எனும் இளைஞர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தின் பின்னணியில் இருக்கக் கூடியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
தீபக் ராஜாவை கொலை செய்வதற்காக லட்சக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. தீபக் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உதாரணமாகக் கொண்டு, தென் தமிழகத்தில் நிலை கொண்டுள்ள கூலிப்படை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த மே 20ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் வழக்கில் கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அதனையடுத்து, இந்த வழக்கில் மறைமுகமாகத் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, திருச்சியில் தலைமறைவாக இருந்த நபர்களைக் கைது செய்யும் போது இருவர் தப்பி ஓட முயன்று படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பிடிபட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணை பழிக்குப் பழி வாங்க கொலை செய்ததாகக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:தீபக் ராஜா கொலை செய்யப்பட்டது ஏன்? - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!