சென்னை: மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கங்கபூர்வாலா 2024ம் ஆண்டு மே 23 ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு, நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து நீதிபதி கிருஷ்ணகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
விரைவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாவட்ட நீதிபதிகளான பூர்ணிமா, ஜோதிராமன், அகஸ்டீன் தேவதாஸ் மரியா கிளேட் ஆகியோரை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கவும் குடியிரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.