சேலம்: பிரதமர் மோடி பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பேசுவதற்கு முன்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள தமிழகத்தைச் சார்ந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட்டனர்.
அதிமுக கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் நிரந்தரமாகப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நம்முடைய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பேசுவார்" என்று ஓ.பன்னீர்செல்வத்தை பேச அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அழைப்பைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "மூன்றாவது முறையாகவும் பிரதமராகி, நரேந்திர மோடி சாதனை புரிவார். இந்தியத் திருநாட்டை கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான முறையில் தலைசிறந்த நிர்வாகத்தை வழங்கி பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். மேலும், கடந்த காலங்களில் ஆண்டு கொண்டிருந்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி தாராளமாக கிடைக்கச் செய்ததை உறுதி செய்தது பிரதமர் மோடி மட்டுமே.
ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்குவதற்கு மாநில அரசு எப்படி சிரமப்பட்டுக் கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால், ஒரே அரசாணையில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொடுத்தது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி மட்டும்தான்" என்று கூறினார்.
அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் பேச முற்பட்டபோது, கே.பி.ராமலிங்கம் குறுக்கிட்டு, "நன்றி ஐயா, பிரதமர் மோடி வந்துவிட்டார்" என்று கூறி, பேச்சை முடித்துக் கொள்ளும்படி ஓபிஎஸ்-ஐ அறிவுறுத்தினார். இதனை அடுத்து, ஓபிஎஸ் நன்றி தெரிவித்துக்கொண்டு தனது இருக்கைக்குச் சென்றார்.