சென்னை:சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்கெட்டில் ஒரு கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதில் அடைப்பு ஏற்பட்டால் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற இயந்திரம் ஒன்று பயன்படுத்தவது வழக்கம். ஆனால் இந்த கால்வாய் கழிவுகள் அகற்றும் இயந்திரம் கடந்த 6 மாதங்களாக பழுது ஏற்பட்டு செயல்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் கால்வாயில் மனிதக் கழிவுகளுடன் தேங்கியுள்ள அடைப்பை அப்புறப்படுத்த, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் கீழ் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக வேலை செய்யும் மூன்று நபர்களை மேற்பார்வையாளர் சிவகுமார் வற்புறுத்தியுள்ளார்.
அவரது வற்புறுத்தலின்ப் பேரில் தற்காலிக துப்புரவு ஊழியர்கள் அருள்தாஸ், சுப்பு, கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் மனிதக் கழிவுகளுடன் தேங்கியிருந்த கால்வாயில் இறங்கி சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டனர். மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இந்த அவலம், தற்போது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:நத்தப்பேட்டை ஏரி கழிவுநீர் விவகாரம்; காஞ்சிபுரம் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!
மனிதக் கழிவுகளுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தும் வரும் நிலையில், தலைநகரின் முக்கிய பகுதியான கோயம்பேட்டில் இப்படி ஒரு அவல நிலையை உருவாக்கிய துப்புரவு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மக்களும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால்தான் மலக்குழி மரணங்கள் ஏற்படுகின்றன எனவும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.