சென்னை:பொங்கல் பண்டிகைக்காக அமைக்கப்பட்டுள்ள கோயம்பேடு சிறப்புச் சந்தையில் விற்பனை மந்தமாக நடைபெறுவதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேட்டில் தமிழக அரசு சார்பில் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்புச் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தையில் தஞ்சாவூர், விருத்தாசலம், வேலூர், வாணியம்பாடி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கரும்பு, மஞ்சள், இஞ்சி, தென்னை ஓலை தோரணங்கள் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு விற்பனை பெரிதும் மந்தமடைந்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் நேரடி விற்பனையில் ஈடுபடும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய விற்பனையாளர் சரிதா, “பொதுவாகப் பொங்கல் பண்டிகைக்கு அமைக்கப்படும் சிறப்புச் சந்தைகள் பிரதான சாலையில் அமைக்கப்படும்.
வியாபாரிகள் பேட்டி (ETV Bharat Tamil Nadu) ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக லாரிகளை நிறுத்தி வைக்கும் இடத்தில் சிறப்புச் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விற்பனை முற்றிலும் மந்தமடைந்துள்ளது. பொங்கல் பொருட்களை வாங்க வரும் மக்கள் கோயம்பேடு முக்கிய சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கடைகளிலேயே பொருட்களை வாங்கி செல்கின்றனர். விலை குறைவாக இருந்தாலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் உள்ளே அமைக்கப்பட்டுள்ள இங்கு யாரும் வருவதில்லை.எனவே, பொதுமக்கள் அதிகம் வரும் பிரதான சாலையிலேயே பொங்கல் சிறப்பு சந்தை அமைக்க தமிழக அரசும், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமமும் அனுமதி அளிக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அரசு பேருந்துகளில் 2.25 லட்சம் பேர் பயணம்...பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!
கரும்பு விவசாயிகள் கூறும்போது, “வழக்கமாக ரூ.600 முதல் ரூ.700வரை கரும்பு கட்டுகள் விற்பனையாகும் . இந்த முறை கரும்பு வரத்து அதிகரித்துள்ளதால் ரூ.400 என்ற அளவில் விலை சரிந்துள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதனால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பொங்கல் முடியும் வரை இதே நிலை தொடர்ந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும்.வரும் நாட்களிலாவது பொதுமக்கள் அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்,” எனக் கூறினார்.
வண்டிகளுக்கு கோயம்பேடு நிர்வாகம் சார்பில் ரூ.1,500 வரை டோக்கன் போடப்படுகிறது, இருசக்கர வாகனம், ஆட்டோ என எந்த வாகனம் வந்தாலும் அவற்றுக்கு டோக்கன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனைத் தவிர்த்து இலவசமாக வாகனங்கள் வர அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.