தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024, கோவை தொகுதி: மும்முனைப் போட்டியில் முந்தப் போவது யார்? - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election Results 2024 Live Updates:பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

கோவை  தொகுதி வேட்பாளர்கள்
கோவை தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit -ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 5:10 PM IST

Updated : Jun 3, 2024, 8:38 PM IST

கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பல்லடம் , சூலூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் பல்லடம், சூலூர் தவிர மற்ற நான்கு சட்டமன்ற தொகுதிகளும் கோவை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ளன.

திமுக சார்பில் கோவை மாநகர முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் ஐ.டி. விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளர்களாக களம் கண்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி போட்டியிட்டுள்ளார்.

2024 தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலின்படி, கோவை மக்களவைத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 21,06,124. இவர்களில் 13,64,945 பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 64.42%.

பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் 2,68,195 பேர், சூலூர் -2,44,734, கவுண்டம்பாளையம் -3,12,359, கோவை வடக்கு -1,98,532, கோவை தெற்கு - 1,45,016 மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1,96,109 பேரும் வாக்களித்துள்ளனர். இதுவே 2019ம் ஆண்டு கோவை மக்களவை தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 19,58,904. இவர்களில் வாக்களித்தவர்கள் 12,50,929 பேர். வாக்குப்பதிவு சதவீதம் 63.86.

கோவை தெற்கில் குறைந்த வாக்குப்பதிவு:2019 தேர்தலைவிட, 2024 தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் கோவை தெற்கு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இத்தொகுதியில் 2019இல் 1,47,864 வாக்குகள் பதிவான நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் 1,45,016 வாக்குகள் பதிவாகியுள்ளன. பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கோவை வடக்கு, சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் சற்று குறைந்துள்ளது. அதேசமயம் கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு சற்று அதிகரித்துள்ளது.

இணைந்த கைகள்:கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 5,71,150 வாக்குகளுடன் 45.85 சதவீத ஓட்டுகளை பெற்றார். தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 11.65 சதவீத ஓட்டுகளுடன் 1,45,104 வாக்குகளை பெற்றிருந்தார்.

திமுக மற்றும் கூட்டணி பலத்தின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான பி.ஆர்.நடராஜன் 1.75 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளதால், இக்கூட்டணியின் வாக்கு சதவீதம் இம்முறை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று 2019 இல், பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், அக்கட்சியின் வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகளுடன் 31.47 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தார். இந்த தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியே களம் காணும் நிலையில், பாஜக கடந்தமுறை பெற்ற 31.47 சதவீத வாக்குகளில் இம்முறை அக்கட்சியின் வேட்பாளர் அண்ணாமலைக்கு எவ்வளவு சதவீத ஓட்டுகள் கிடைக்கும்? இதில் பெருவாரியான வாக்குகள் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு இருகட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

பிரியாணி விருந்துக்கு காத்திருக்கும் உடன்பிறப்புகள்:நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கோவை தொகுதி திமுக பொறுப்பாளராக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நியமிக்கப்பட்டார். பாஜக வேட்பாளராக இங்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை களமிறங்கி உள்ளார். அவரை தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதை கட்சி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தும் வகையில், தேர்தல் முடிவு வெளியானதும் கட்சியினருக்கு சூடான, சுவையான ஆட்டு பிரியாணி விருந்து வைக்கப்படும் என்று ராஜா வாக்குறுதி அளித்தார். தொகுதியில் தேர்தல் சுற்றுப் பயணம் சென்ற இடமெல்லாம் திமுக நிர்வாகிகள் அவருக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக அளித்தனர்.

நடனமாடி அசத்திய அதிமுக வேட்பாளர்:அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். குறிப்பாக ஆனைகட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு பரப்புரைக்கு சென்றபோது மலைவாழ் மக்களுடன் இணைந்து ஜமாப் மத்தளம் அடித்து நடனமாடினார்.

அண்ணாமலை வாக்குவாதம்:இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், அதனை மீறி பிரச்சாரம் செய்ததாக அண்ணாமலை மீது புகார் எழுந்தது. ஆவாரம்பாளையம் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த நாள் ஒண்டிபுதூர் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரச்சாரம் செய்ததாக காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என அறியுறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் அண்ணாமலைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நா.த.க. தொண்டர்கள் ஏமாற்றம்:நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கலாமணி பெரிதாக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே சென்று தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். சூலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி திடீரென கூட்டத்தில் இருந்து கிளம்பி சென்றார். இதனால் கட்சித் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையும் படிங்க:ரூ.4 கோடி விவகாரம்.. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்!

Last Updated : Jun 3, 2024, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details