கொடைக்கானலில் பறவைகள் கணக்கெடுப்பு திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பெரும்பாலான இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டிலும், வனப்பகுதியாகவும் இருந்து வருகின்றது. இங்கு பல்வேறு வனவிலங்குகள் மட்டுமின்றி பறவை இனங்களும் வசித்து வருகின்றன. மேலும், கால நிலைக்கு ஏற்ப பல்வேறு பறவைகள் இங்கு வந்து செல்லும்.
இதில் குறிப்பாக, கிரே ஹெட்டட் கென்னறி பிளே கேட்சிங், பிளாக் அண்ட் ஆரஞ்சு பிளை கேட்சிங், யுரேசியன் பிளாக் பேர், சுமிட்டர் வாபுலர், நீலகிரிஃபிளை கேட்ச்சர், ஓரியண்டல் ஒயிட் ஐ, பழனி லாபிங் திரஸ், பார்விங் பிளை கேட்ச்சர், ஸ்டிக்கில்டு புளு பிளை கேட்ச்சர், ரஸ்டி டைல்டு பிளை கேட்சர் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் உள்ளன.
இந்த சூழலில், கொடைக்கானலில் வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பானது நடைபெறும். ஆனால் இங்கு பறவைகள் கணக்கெடுப்பானது முறையாக நடைபெறுவது இல்லை என பறவைகள் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடாத நிலையில், மீண்டும் தற்போது பறவைகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருவது, கண்துடைப்பாக இருந்து வருவதாகப் பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொடைக்கானலில் யானை, காட்டெருமை, சிறுத்தை, மான், வரையாடு, குரங்குகள், புலி உள்ளிட்ட விலங்குகள் இருந்து வரும் நிலையில், வனவிலங்குகள் கணக்கெடுப்பும் முறையாக நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. எனவே, பறவைகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க:"மகனாக நான் இருக்கிறேன்" - பூரணம் அம்மாளிடம் நெகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்!