சென்னை:சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தேசிய மகளிர் ஆணைய தலைவர் குஷ்பூ, மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார். இதனைக் கண்டித்து, தேனி மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு, குஷ்பூவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் குஷ்பூவை கண்டித்து திமுக மகளிர் அணியினர் குஷ்பூவின் படத்தை காலணிகளால் தாக்கியதோடு படத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இந்நிலையில், நடிகை குஷ்பூ தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "திமுகவில் இருந்து எல்லோரும் இன்று என்னைப் பற்றிப் பேசி வருகிறார்கள். நான் பேசிய பழைய ட்விட் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
நான் பேசும் போது ஐடி விங்க், வார் ரூம் வைத்து பேசுவதில்லை. நேருக்கு நேர் பேசும் தைரியம் எனக்கு இருக்கிறது. குஷ்பு பேசுனா அவ்வளவு பயமா? ஏனென்றால் குஷ்பு உண்மையைப் பேசுவாள். தைரியமாகப் பேசுவாள். நான் பேசியதற்கு தவறாக அர்த்தம் எடுத்துகிட்டு ,அதை மட்டும் மக்கள் மத்தியில் போடுகிறதுக்கும், மக்களைத் திசை திருப்புவதும் உங்களுடைய வேலை. நீங்கள் எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்றுகிறீர்கள், ஏமாற்றி வருவீர்கள், ஏமாற்றி இருக்கிறீர்கள், அது உங்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.
டாஸ்மாக் விவகாரம்: டாஸ்மாக் குறைப்பீர்களா, மாட்டீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் குறைப்போம் என முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சொன்னார்கள். திமுக நிர்வாகியிடமிருந்து ரூ.2,000 கோடி மதிப்பில் 3,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.
நான் பேசிய பழைய வீடியோக்களை எடுத்து போடுகிறதுதான் உங்களுடைய டிஎன்ஏ. இப்ப இருக்கிற பிரச்னைகளை பேசுவதற்கு உங்களிடம் எதும் இல்லை. மக்களுக்கு என்ன செய்தீர்களோ அதைச் சொல்லுங்கள். அது சொல்ல உங்களுக்கு தைரியம் இல்லை. உங்களுக்கு தைரியம் இருக்கவும் இருக்காது. ஏனென்றால், திமுக பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அந்த தைரியம் உங்களுக்கும் இல்லை, உங்கள் தலைவனுக்கும் இல்லை.
திமுக டிஎன்ஏ: தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு நீங்கள் ரூ.1,000 கொடுப்பதற்குப் பதிலாக, டாஸ்மாக் கடைகளைக் குறைத்தால் பெண்கள் பல ஆயிரம் சேமித்து குடும்பத்தை நல்லபடியாக, சந்தோஷமாக நடத்த முடியும் என்றுதான் நான் சொன்னேன். இதை திசை திருப்பிட்டு, பெண்களைக் கேவலப்படுத்தும் படி நான் பேசுகிறேன் எனச் சொல்கிறீர்கள். தப்பான ஒரு விஷயத்தை பரப்புவது திமுகவின் டிஎன்ஏ.