கரூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். அந்த வகையில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய கிழக்கு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் அவரை ஆதரித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜோதிமணி பேசியதாவது, "நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ரூ.500க்கு சிலிண்டர் வாங்க வேண்டுமா? ரூ.1000க்கு சிலிண்டர் வாங்க வேண்டுமா என்றும், ரூ.60 க்கு பெட்ரோல் வாங்க வேண்டுமா? இல்ல ரூ.120 க்கு பெட்ரோல் வாங்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டிய தேர்தல்.
கரூரில் 2 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தோம். தற்போது 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்பதில் தடுமாறுகிறோம். அதானி, அம்பானி நாட்டை கொல்லையடித்து விட்டு பிரதமர் மோடியை விட நன்றாக உள்ளனர். பத்தாண்டு கால பிரதமர் மோடி ஆட்சியை நிறைவுக்கு கொண்டு வர வேண்டும்.
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய என் மீது, தொகுதி பக்கம் வரவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து பிரச்சாரம் செய்யும் அதிமுக, பாஜக வேட்பாளர்களை மக்கள் திருப்பி கேள்வி கேட்க வேண்டும். தனக்கு தொகுதி மக்கள் தான் குடும்பம். எனது முழு நேர பணியை தொகுதி மக்களுக்காக செலவிடுகின்றேன்.