சிவகங்கை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "நமது பண்பாட்டை விட அரசியல் சாசனத்தைப் பின்பற்றுவது அவசியம். ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுவர் என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஜனநாயக முறைப்படி அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்" என்று கூறினார்.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் வெல்லாதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "விளையாட்டு நமது கலாச்சாரத்திலேயே இல்லாமல் போய்விட்டது. சில பள்ளிகளில் மைதானங்களே கிடையாது, உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. அஸ்திவாரம் சரியில்லாததால் உச்சத்தை எட்ட முடியாது. கலாச்சாரத்தோடு விளையாட்டு இருந்தால் தான் விளையாட்டில் அதிக அளவில் ஈடுபடுவார்கள்.
பள்ளிகளில் உடற்கல்வியை கட்டாய பாடமாக்க வேண்டும். பொதுத் தேர்வில் உடற்கல்வியினை அடிப்படை பாடமாக வைக்க வேண்டும். முந்தைய காலகட்டத்தை விட மத்திய அரசு, தற்போது நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு அதிக ஊக்கம் அளித்துள்ளனர். இந்திய அளவில் விளையாட்டில் எந்த மாற்றமும் வரவில்லை" என்று பதிலளித்தார்.
மேலும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவைச் சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்தாலோசித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரத்திடம், திருமாவளவனின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "திருமாவளவன் ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் குறிப்பிடுகிறாரா? சமுதாயத்தைக் குறிப்பிடுகிறாரா? என்று பார்க்க வேண்டும். அவர் சமுதாயத்தை தான் குறிப்பிடுகிறார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் தலைமையை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். அதை நான் கண்கூடாக பார்த்துள்ளேன். அனுபவ ரீதியாகவும் அறிந்துள்ளேன்.
பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சர் என்று அறிவித்தால், சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் முன்னேற்றம் வரவில்லை என்று திருமாவளவன் சொல்லும் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் கக்கனுக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முக்கியமான அமைச்சர் பொறுப்புக்கு வர முடியவில்லை என்பதை ஆட்சி செய்பவர்களிடம் தான் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.