புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், ”நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியால் தான் ஜெயிச்சோம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் கூட்டணியால்தான் ஜெயிச்சோம் என்றாலும் நமக்கு எந்த பங்களிப்பும் இல்லை என சிலர் சித்தரிக்கிறார்கள்.
அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நமக்கென்று ஒரு வாக்கு வங்கி இப்போதைய காலகட்டத்தில் இல்லை என ஏற்றுக் கொண்டாலும், நடந்து முடிந்த தேர்தலில் சிறுபான்மையினர் நமது அணிக்கு நம்பிக்கையோடு வாக்களித்தார்கள் என்றால் அது மத்தியிலேயே காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும், ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்று தான் வாக்களித்தார்கள்.
வாக்கு வங்கி வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்திருக்கலாம். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பிரதான கட்சியாக காங்கிரஸ் இருந்தது. அதன் பின்னர் இரண்டாவது, மூன்றாவது கட்சியாகவும் இருந்து அந்த நிலை மாறிப் போய் உள்ளது.
கூட்டணி கட்சியால் தான் வெற்றி பெற்றோம், மாதம் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உதவித் திட்டம் மூலம் கணிசமாக வாக்குகளைப் பெற்றோம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதையெல்லாம் மனதார பாராட்டுகிறேன்.
ஆனால் அரசாங்கத்தில் நமக்கு பங்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அரசியலில் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும், ஆளுங்கட்சியாக இருக்க வேண்டும், இதில் இரண்டும் இருக்கும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அதனால்தான் காங்கிரஸ் கட்சியை தேர்தல் நேரத்தில் மட்டும் சேர்த்துக் கொள்கிறார்கள். தேர்தல் இல்லாத இடங்களில் நம்முடைய மதிப்பு என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.