சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை மாநகராட்சியாக கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்து, அதற்கான ஆணையை தமிழக முதல்வர் காரைக்குடி நகராட்சித் தலைவரிடம் வழங்கினார். இதன்படி, சுற்றுப்புறத்தில் உள்ள 5க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மற்றும் இரண்டு பேரூராட்சிகள் காரைக்குடி மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்பொழுது கிராமப்புற ஊராட்சிகள் மாநகராட்சி பகுதியில் இணைக்கப்படுவதால், குறிப்பாக 100 நாள் வேலைக்குச் செல்லக்கூடிய கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அரியக்குடியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காரைக்குடி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வாழ்வாதாரமான 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் கிராம ஊராட்சியில் உள்ள வேலைகள் பாதிக்கப்படுவதாகவும், மாநகராட்சியாக இணைக்கும் பொழுது தங்களின் கருத்துக்கள் கேட்கப்படாமல் தாங்களாக தன்னிச்சையாக அரியக்குடி பகுதியை இணைத் துவிட்டீர்கள் எனக்கூறி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.