கன்னியாகுமரி:நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் மத்திய மந்திரியும் பாஜகவின் முன்னாள் மாநில தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள பொன். ராதா கிருஷ்ணன் குமரி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீதர் அவர்களிடம் இன்று (மார்ச் 25) வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி மற்றும் பாஜக குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் இருந்தனர்.
பொன்.ராதாகிருஷ்ணன் பின்னணி: பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் ராமவர்மபுரம் எஸ் எல் பி தெற்கு ரோட்டில் வசித்து வருகிறார். இவருடைய சொந்த ஊர் ராஜாக்கமங்கலம் அருகில் உள்ள அளத்தங்கரை. 1952 ஆம் ஆண்டு பிறந்த இவர், சென்னையில் சட்டப்படிப்பைப் படித்துள்ளார்.
72 வயதாகும் பொன். ராதாகிருஷ்ணன் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், 1979 ஆம் ஆண்டு முதல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி உள்ளார். 1993ஆம் ஆண்டு குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும், 1997 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா மாநில பொதுச் செயலாளராகவும் 2006ம் ஆண்டு பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவராகவும் மற்றும் 2009ஆம் ஆண்டு பாரதிய ஜனதா மாநில தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
இவர் கால்பந்து மற்றும் கபடி விளையாட்டு வீரரும் ஆவார். இவர் ஏற்கனவே ஒன்பது முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். அதாவது கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி முன்பு நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி என்ற பெயரில் இருந்தது அப்போது 1991, 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளிலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி என்று பெயர் மாற்றப்பட்ட பிறகு 2014, 2019, 2021 ஆகிய ஆண்டுகளிலும் போட்டியிட்டு உள்ளார்.
கடந்து 2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மேலும், 1999 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இவர் மத்தியில் அமைந்த பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணை மந்திரியாகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை மந்திரியாகவும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார்.
2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை இணை மந்திரியாகவும் சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரியாகவும், நிதித்துறை மற்றும் துறை முகத் துறை இணை மந்திரியாகவும் பதவி வகித்தார்.
பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலுடன் நடந்த கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில், ஏப்ரல் 19ம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பத்தாவது முறையாகப் பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராகக் களம் இறங்கி உள்ளார்.
இதையும் படிங்க:நெல்லை, மயிலாடுதுறைக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது? - செல்வப்பெருந்தகை அளித்த விளக்கம் - Selvaperunthagai