சென்னை:சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “ திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான கருத்துக்களை தொடர்ந்து வைத்து வருகிறோம். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்காமல் இல்லை. சிஏஏக்கு எதிராக அனைத்து இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கியதில் நிறைய சந்தேகங்கள் உள்ளது. எதன் பிறகு அந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்று பல்வேறு கேள்விகள் உள்ளன. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற சோதனைகளின் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு நிதி வழங்கப்பட்டுள்ளது என்பது பல்வேறு தரப்பினர் சொல்லும் கருத்தாக உள்ளது” என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டம்:கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்தது. குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் மார்ச் 11, 2024 அன்று அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT - CAA) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளார்.