சென்னை:தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 5 லட்சத்து 40 ஆயிரத்து 729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார்.
கனிமொழி செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) மேலும், தூத்துக்குடி தொகுதியில் போட்டியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயசீலன் மற்றும் நாதக சார்பில் போட்டியிட்ட ரொவினா ருத் ஜேன் உட்பட 27 வேட்பாளர்களின் டெபாசிட் காலியாகியுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் கனிமொழி. அப்போது திமுக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கனிமொழி கூறுகையில், “மீண்டும் என் மீது இந்த அளவிற்கு நம்பிக்கையை வைத்து வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கக்கூடிய தூத்துக்குடி மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமே இல்லை. தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். நிறைய பேர் கனவோடு இருந்தனர், அந்த கனவு தற்போது தெளிவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது போல ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.
ஆனால், இன்று மாலை இந்தியா கூட்டணியினுடைய ஆலோசனைக் கூட்டம் இருக்கிறது. அங்கேதான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும். அண்ணாமலை என்னைப் பார்த்து அடிக்கடி ஒரு கேள்வி கேட்பார். 'கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று?' இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக அவருக்கு நான் பதில் சொல்கிறேன். அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் தமிழ்நாட்டின் பாஜகவின் தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நிச்சயமாக நல்லது கிடையாது.
அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது பிரதமர் மோடி முதல் 3 சுற்றுகளில் பின்னடைவைச் சந்தித்தார். பாஜகவின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தனி சின்னத்தில் வெற்றி...அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக உருவெடுக்கும் விசிக..!