தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறித்துவ ஆலயத்தை பாதுகாத்த எட்டையபுரம் பாளையக்காரர்கள்.. கல்வெட்டு கூறும் முக்கிய தகவல்கள்! - Kamanayakkanpatti church

Kamanayakkanpatti church: 350 ஆண்டுகளுக்கு முன் காமநாயக்கன்பட்டி தேவாலயத்துக்கும், குருக்களுக்கும், சிஷ்யர்களுக்கும் எட்டையபுரம் பாளையக்காரர்களான செகவீர மற்றும் திசவீர எட்டப்ப நாயக்கர்கள் பாதுகாப்பு கொடுத்ததை காமநாயக்கன்பட்டி தேவாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

காமநாயக்கன்பட்டி தேவாலயம், கல்வெட்டு
காமநாயக்கன்பட்டி தேவாலயம், கல்வெட்டு (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 11:03 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தேவாலயத்தில் 350 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்று உள்ளது. 350 ஆண்டுகளுக்கு முன் காமநாயக்கன்பட்டி தேவாலயத்துக்கும், குருக்களுக்கும், சிஷ்யர்களுக்கும் எட்டையபுரம் பாளையக்காரர்களான செகவீர மற்றும் திசவீர எட்டப்ப நாயக்கர்கள் பாதுகாப்பு கொடுத்ததை அக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

காமநாயக்கன்பட்டி தேவாலயம் (credits - ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாட்டுக்கு போர்ச்சுகீசியர்கள் வணிகம் செய்ய வந்தபோது, சேசுசபை மூலம் கத்தோலிக்க கிறித்துவம் பரவியது. அந்நேரம் மதுரை சேசுசபையினரால், கி.பி.1600-ல் காமநாயக்கன்பட்டியில் ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டது. இங்கு புனித அருளானந்தர், வீரமாமுனிவர் ஆகியோர் சமயப் பணி ஆற்றியுள்ளனர். 300 ஆண்டுகளுக்கு முன் கத்தோலிக்கத் திருத்தலத்தில் மாதாவின் தேர்பவனி தமிழ்நாட்டில் முதன்முறையாக வீரமாமுனிவர் காலத்தில் இங்கு தான் தொடங்கப்பட்டது.

அதன் சாட்சியாக, பூவரச மரத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய இரு தேர்கள் இன்றும் உள்ளன. எட்டையபுரம் பாளையக்காரருக்கு நன்கு அறிமுகமான சேவியர் போர்க்கீசு என்ற பாதிரியார் இங்கு பணிபுரிந்தபோது, திசவீர எட்டப்ப நாயக்கர் நேரில் வந்து ஆலயத்துக்கு யாரும் இடையூறு கொடுக்கக் கூடாது என ஆணையிட்டு, கொல்லம் ஆண்டு 863-ல் கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளார். தேவாலய முன்வாசலின் தென்பகுதியில் உள்ள கல்வெட்டின் தற்போதைய ஆண்டு கி.பி.1688 ஆகும்.

கல்வெட்டு (credits - ETV Bharat Tamil Nadu)

இதுவரை ஆவணப்படுத்தப்படாத இக்கல்வெட்டை படியெடுத்து படித்து ஆய்வு செய்தபின் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு மற்றும் விருதுநகர் மாவட்டம் நூர்சாகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோர் கூறியதாவது, “இந்த கல்வெட்டில் ‘செகவீர எட்டப்பனாயக்கரவர்கள் நம்முடைய சீமையிலே சறுவேசுரனுடைய இந்தக் கோயிலும் ரோமாபுரிச் சன்னாசிகளுடைய மடமும் நம்முடைய தகப்பனார் காலத்திலே இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன் ஒரு விக்கனமும் இல்லாமல் நடத்திக் கொண்டு வந்ததினாலே, இப்போது நாமும் அப்படி தானே நடத்திவிக்க வேணுமென்று இந்தக் கோயிலும், இதிலே இருக்கப்பட்ட குருக்களையும் வந்து சந்திச்சு இப்படிக்குக் கல்லும் வெட்டி விச்சுக் குடுத்தோம்.

ஆனபடியினாலே இந்தச் சறுவேசுரனுடைய கோயிலுக்குங் குருக்களுக்கும் அவர்களுடைய சிஷர்களுக்கும் யாதொரு விக்கினம் பண்ணுகிறவன் நமக்குத் துரோகியாய்ப் போறதுமில்லாமல் கெங்கைக் கரையிலே காராம் பசுவையும், பிராமணரையும் கொன்ன தோஷத்திலே போவாராகவும். இப்படிக்கு சந்திர, சூரியன் உள்ள வரைக்கும் கட்டளை இட்டோம். திசவீர எட்டப்பனாயக்கர் சுவாமி லட்ச சித்து’ என கூறப்பட்டுள்ளது.

இதன் விளக்கம் யாதெனில், எட்டையபுரம் பாளையக்காரர் செகவீர எட்டப்பநாயக்கர் கி.பி.1663ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கு தன்னுடைய சீமையில் உள்ள சறுவேசுரன் கோயில் மற்றும் ரோமாபுரி சன்னாசிகள் மடம் ஆகியவற்றிற்கு எந்த இடையூறுமின்றி அதற்குப் பாதுகாப்புக் கொடுத்து நடத்திக் கொண்டு வந்திருக்கிறார். தன் தகப்பனார் செய்ததை, தானும் அப்படியே தொடர்ந்து நடத்த வேண்டும் என விரும்பிய திசவீர எட்டப்ப நாயக்கர், இந்தக் கோயிலுக்கு வந்து இங்கிருந்த குருக்களை கி.பி.1688-ஆம் ஆண்டு சித்திரை மாதம் 10ஆம் நாள் சந்தித்து, அதைக் கல்வெட்டாகவும் வெட்டிக் கொடுத்துள்ளார்.

கல்வெட்டின் இறுதியில் வரும் ஓம்படைக்கிளவி என்பது ஆட்சியாளர்களால் கொடுக்கப்படும் தர்மத்திற்கு, யாராவது கெடுதல் செய்தால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிக் கூறுவதாகும். இக்கல்வெட்டின் ஓம்படைக்கிளவி, இந்தச் சறுவேசுவரனுடைய கோயிலுக்கும், குருக்களுக்கும் அவர்களுடைய சிஷ்யர்களுக்கும் ஏதாவதொரு பிரச்சினை பண்ணுகிறவன் தனக்குத் துரோகியாவான் என்றதன் மூலம், எட்டையபுரம் பாளையக்காரர்கள் பல தலைமுறைகளாக இத்தேவாலயத்தை பாதுகாத்து வந்துள்ளதை அறிய முடிகிறது.

விஜயநகர, நாயக்கர் கால சைவ, வைணவக் கோயில் கல்வெட்டுகளில் சொல்லப்படும் ஓம்படைக்கிளவி இக்கல்வெட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இத்தேவாலயம் பலமுறை எரிக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் வந்துள்ளது. ஆகவே மீண்டும் மீண்டும் இதைக் கட்டி எழுப்பியிருக்கிறார்கள். இத்தகைய இடையூறுகளை முடிவுக்குக் கொண்டுவர எட்டையபுரம் பாளையக்காரரின் இக்கல்வெட்டு உறுதுணையாக இருந்துள்ளது. கத்தோலிக்க கிறித்துவ ஆலயங்கள், அக்காலக் கல்வெட்டு, செப்பேடுகளில் சறுவேசுரன் கோயில் எனப்படுவது போல இதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினர்.

இதையும் படிங்க:“பனைமரத்தை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” - தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - ban on cutting of palm trees

ABOUT THE AUTHOR

...view details