சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியாகும் முன்னரே, திமுக தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது.
அதன்படி, முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், கடந்த பிப்.24ஆம் தேதி 2வது கட்ட பேச்சுவார்த்தைகளை திமுக தொடங்கியது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை உடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டு, இந்திய யூனியன் முஸ்ஸிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர், இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.
இதனையடுத்து, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்திட்டனர். இதேபோல், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இழுபறி நிலை நீடித்து வருவதால், திமுக தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
மக்கள் நீதி மய்யம்:இதற்கிடையே திமுகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யம், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், இதுவரை திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையேயான கூட்டணி உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக Thug Life படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்த கமல்ஹாசன், அதனைத் தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி இறுதியாகாததால், வெளிநாடு பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் திமுக - மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதியாகும் எனக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு கமல்ஹாசன் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:"பாஜக தலைமையுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.."- கூட்டணி குறித்து ஓபிஎஸ் கூறியது என்ன?