வேட்பாளர் பெயரை மறந்த கமல்ஹாசன் திருச்சி:தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்த்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நேற்று (செவ்வாய்க்கிழமை) திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து ஶ்ரீரங்கம் கோவில் ராஜ கோபுரம் முன்பு திறந்த வேனில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவிற்கு ஆதரவாக துறையூர் பாலக்கரை பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது "தனக்காக ஓட்டு கேட்க வரவில்லை கே.என்.நேருவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வந்துள்ளேன். கே.என்.நேருவிற்கு ஆதரவாக வாக்களித்தால் தமிழ்நாடு முன்னேறும், உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்" எனப் பேசினார்.
இதனால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் "அவர் கே.என் நேரு இல்ல, அருண் நேரு என்றனர்". இதனை உணர்ந்த கமல்ஹாசன், "எப்படி சொன்னாலும் ஒன்றுதான் ஒரே குடும்பம்தான், எனக்கு பல நாள் பழக்கம் அதான் அப்படியே வந்துருச்சு. அந்த நேருவில் இருந்து இந்த நேரு வரைக்கும் நான் சின்ன வயசுல இருந்து பாத்துட்டு இருக்கேன்.
ஜவஹர்லால் நேருவின் குடும்பம் போல் மக்கள் சேவை செய்து கொண்டு இருக்கிறது இந்த குடும்பம் (கே.என்.நேரு குடும்பம்). இதற்கான சாட்சியங்கள் திருச்சி மாநகர் முழுவதும் நிறைந்துள்ளது" என்று தன்னுடைய பாணியில் ஒரு பதிலை அளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
இதையும் படிங்க:'வேட்டைநாயைப் போல அமலாக்கத்துறை, ஐடி துறையை பயன்படுத்துவதா?' - கமல்ஹாசன்