கடலூர்:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக பிரச்சார பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சிதம்பரம் மற்றும் பி. முட்லூரில் பிரச்சாரம் செய்தார்.
நடிகர் கமல்ஹாசனுடன் விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளருமான திருமாவளவன் திறந்த வேனில் நின்று ஆதரவு திரட்டினார். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருமாவளவனுக்கு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது, “எல்லோரும் இங்கு வந்திருப்பது அவசர நிலையை கருத்தில் கொண்டுதான். எந்த சித்தாந்தமும் மக்களுக்காகத்தான்.
இது தியாகம் அல்ல; வியூகம்:மாவோயிஸ்ட், கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட், அம்பேத்காரிஸ்ட் என எல்லா ஸ்டுகளும் தேசத்திற்கு பாதுகாப்பின்மை வரும்போது தோளோடு தோள் நிற்க வேண்டும். ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் இன்று திருமாவளவனோடு தோள் உரசி களம் கண்டிருக்கின்றேன். இந்த முறை அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து விட்டால் ஜனநாயகமே இருக்காது என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். இதனால் தான் நாங்கள் களம் கண்டுள்ளோம்.
எனது கட்சிக்காரர்கள் தியாகம் பண்ணிட்டீங்க என்று கேட்கிறார்கள். இது தியாகம் அல்ல. வியூகம். களம் காண வேண்டிய தேவைக்காக அவரும் வந்திருக்கிறார். நானும் வந்திருக்கிறேன். நல்லவேளை அரசியலுக்கு 25 வருடங்களுக்கு முன்னாலே அவர் வந்திருக்கிறார். அன்று வந்த திருமாவளவனுக்காக இன்று தாமதமாக நன்றி சொல்கிறேன். திருமாவளவனின் 60 வயதில் திருமாமணி என்ற நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலில் எனது வாழ்த்தும் இடம்பெற்று இருந்தது.
வாழ்விலும், சினிமாவிலும் சாதிக்கு இடமில்லை: அதில் நான் தன்னிகரில்லா தமிழர் என்று தலைப்பை கொடுத்திருந்தேன். பெருஞ்சிறுத்தை திருமாவளவன். இவரது ஆற்றல் மிக்க பேச்சும், ஞானமும் என்னை கவர்ந்திருக்கிறது. நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே என் எதிரி யார் என முடிவு செய்து கொண்டு விட்டேன். சாதியம் தான் என் எதிரி. எனது வாழ்வில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களுக்கும் இடமில்லை. பிறகு ஏன் சினிமாவிற்கு சாதிப்பெயர் வைக்கிறீர்கள் என கேட்பார்கள். அதற்கு இது பதில் அல்ல. விளக்கம்.
மீனவர்களை காக்கத்தவறிய அரசு:ஆல்கஹாலின் தாக்கத்தைப் பற்றி ஒரு படம் எடுக்க நினைத்தால், அதன் கதாநாயகன் குடிப்பவராகத்தான் இருப்பார். அதுபோலத்தான் சாதி வெறியை மையப்படுத்தி படத்தை எடுத்தால் அதில் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அது சாதியை உயர்த்தி பிடிப்பதாக ஆகாது. சாதியே இல்லை என்கிறீர்கள். சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் என்று கேட்கிறார்கள். இன்னும் எத்தனை பேர் அடிமட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் அந்த கணக்கெடுப்பு.
1921இல் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியபோது சர்வாதிகாரிகள் பதறிப் போனார்கள். அதற்குப் பிறகு 1979-இல் மண்டல் கமிஷன் கூறியபோது அவர்கள் பெரும் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அதை வி.பி. சிங் அறிமுகப்படுத்தியபோது பாஜக செய்த ரகளையை யாரும் மறக்கவில்லை. பின்னர், அதற்கு சமரசம் செய்யும் வகையில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என கணக்கெடுப்பு கூறினார்கள். தமிழ்நாடு மீனவர்களை காக்கத்தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு.
ஒன்றுமே செய்யவில்லை இந்த ஒன்றிய அரசு: 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவிற்கு கடலோடிகள் கைது செய்யப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும், பின்னர் ஏலம் விடப்படுவதும், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இலங்கைக்கும், தமிழகத்திற்கும் பல ஆண்டு காலமாக பகையும், உறவும் மாறி மாறி இருந்திருக்கிறது. அந்த சரித்திரம் படித்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் தெரியும். நீங்கள் புதிய சரித்திர கதைகளை கூறாதீர்கள்.
ஒன்றுமே செய்யவில்லை இந்த ஒன்றிய அரசு என்பதுதான் உண்மை. விவசாயிகளின் துயரம் சொல்லித் தெரியவில்லை. இப்போது பத்திரிகைகள் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள். இருந்தாலும் அடக்க முடியாமல் வெளியில் வருகிறது. அவர்கள் நியாயம் கேட்டார்கள். விவசாயிகள் போராடினார்கள். அப்போது சில வாக்குறுதிகளை தந்தார்கள். ஆதரவு விலை தருகிறோம் என்று கூறினார்கள். கைது செய்யப்பட்டவர்களுக்கு விடுதலை தருகிறோம்.