சென்னை: இது தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "இன்றைய காலகட்டத்தில் ஒரு பாடப்பிரிவில் இருந்து மட்டுமே ஒரு பொருளை உருவாக்க முடியாது. ஐந்து அல்லது ஆறு பாடப்பிரிவில் பயின்றவர்கள் இணைந்து தான் ஒரு பொருளை உருவாக்க முடியும்.
12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வரும் மாணவர்கள் அறிவியல், கணக்கு போன்றவற்றை படித்திருந்தாலும், அவர் எதை படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யாமலே இருக்கின்றனர். மாணவர்களுக்கு சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் என ஒரு பாடப்பிரிவினை அளித்து விடுகிறோம்.
இந்த நிலையில், ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பயிலும் மாணவர்கள் 60 சதவீதம் அந்த பாடத்தின் அடிப்படையை படித்து விட்டு, 40 சதவீதம் எந்த பாடத்தை வேண்டுமானாலும் விரும்பி படிக்கலாம் என கூறியுள்ளோம். அப்படி 40 சதவீதம் விரும்பிய பாடத்தை படிக்கலாம் எனக் கூறிய பின்னர், தங்களுக்கு விருப்பப்பட்ட பாடப்பிரிவு கிடைக்கவில்லை என ஏங்கவில்லை. அதன்படி, ஆர்வம் உள்ள மாணவர்கள் இரட்டை பட்டத்தை தேர்வு செய்து தாங்கள் விரும்பிய பட்டத்தை பெற்றுச் சென்றுள்ளனர்.
சென்னை ஐஐடியில் 20 இன்டர் டிசிப்ளினரி கோர்ஸ் (Interdisciplinary course) உள்ளது. மாணவர்கள் இரண்டு ஆண்டு ஒரு பாடப்பிரிவினை படித்துவிட்டு, அதன் பின்னர் விரும்பும் பாடப்பிரிவு மற்றும் படிப்பினை இரட்டை பட்டம் பெறும் வகையில் தேர்வு செய்து படிக்கலாம். பிற பல்கலைக்கழகங்களும் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து யோசிக்க வேண்டிய காலக்கட்டம் வந்துள்ளது.
மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் அறிவியல் பாடங்களை படித்து வருகின்றனர். ஐஐடியில் சேர்ந்த பின்னர் அவர்கள் பாடத்துடன் தொடர்பு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தோம். இதனால் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அந்தப் பாடத்திற்கு தொடர்புடையவற்றை கற்றுத் தருகிறோம். உலகத் தரத்தில் கல்வியை அளிக்கும் வகையிலும் மாணவர்களுக்கான சுமையை குறைக்கும் வகையில் அவர்களுக்கு உரிய கிரெடிட் குறைக்கப்பட்டுள்ளது.
Recreation Course: மாணவர்களுக்கு ரீகிரியேஷன் கோர்ஸ் (Recreation Course) கொண்டு வந்துள்ளோம். மாணவர்களுக்கான மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரண்டு பாடப்பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கும் கிரெடிட் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உடற்பயிற்சி, விளையாட்டு, நீச்சல், கலை உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபடும் வகையில் இந்த பாடப்பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘உன்னை நீ புரிந்து கொள்’ என்ற தலைப்பில் மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது எப்படி? திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி? சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வது எப்படி? போன்றவற்றையும் கற்றுத் தருகிறோம். மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பாடத்திட்டத்திலும் சேர்த்துள்ளோம்.
மாணவர்கள் தொழில் முனைவோர்: மூன்றாவது மற்றும் நான்காவது பருவத்தில் மாணவர்களை தொழில் முனைவோராக உருவாக்குவதற்கான பாடத்திட்டத்தை சேர்த்துள்ளோம். இந்த ஆண்டு 100 தொழில் முனைவோர்களை உருவாக்குவதென திட்டமிட்டுள்ளோம். மூன்று நாளைக்கு ஒரு ஸ்டார்ட் அப் உருவாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள் படிக்க வேண்டுமென வருகின்றனர். அவர்களுக்கு தொழில் முனைவோராக வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்காக மூன்று மற்றும் நான்காம் பருவத்தில் பாடத் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.
மேலும், மாணவர்கள் இதில் கற்பிக்கப்படும் பாடத்தை புரிந்து கொண்டு தொழில் செய்வதற்கு முயற்சிக்கும் பொழுது அதற்கான வழிகளையும், தொழிலில் ஈடுபடும் பொழுது மேற்கொள்ள வேண்டிய சிரமங்களையும் கற்றுத் தரப்போகிறோம். இதனால் ஸ்டார்ட் அப் 100 வெற்றி பெறும் என்பது தீவிர நம்பிக்கையாக உள்ளது.
எலக்டிவ் அறிமுகம்: எலக்டிவ் பாடத்தில் விளையாட்டுப் பிரிவில் 5 தேசிய விளையாட்டு வீரர்கள் சென்னை ஐஐடியில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர். இவர்களுக்காகவும், மற்ற மாணவர்களுக்காகவும் விளையாட்டு தொடர்புடைய எட்டு எலக்டிவ் பாடப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு விளையாட்டுப் பிரிவின் கீழ் மாணவர்களை சேர்த்ததால் விளையாட்டு தொடர்பான எலக்டிவ் அறிமுகம் செய்துள்ளோம். உலகத் தரத்தில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளோம். இதன் பலன் நான்காண்டுகள் கழித்து தெரியும். மேலும், மாணவர்கள் உலக அளவில் நல்ல முறையில் வெற்றி அடைந்து சாதிப்பார்கள் என நம்புகிறோம். இந்த ஆண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு கோர் டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.