கள்ளக்குறிச்சி:கடந்த 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் உருவானது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி. ஒரு மக்களவைத் தொகுதியில் 4 தனி சட்டப்பேரவைத் தொகுதிகளையும், 2 பொது சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு பொது மக்களவைத் தொகுதியாக கள்ளக்குறிச்சி திகழ்கிறது.
ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி), ஏற்காடு (தனி), கள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம் உள்ளிட்ட விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரை இரண்டு முறை திமுகவும், ஒரு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
அபார வெற்றி: கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தலின்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,28,539 ஆண்கள் 7,57,882 வாக்காளர்களும், பெண்கள் 7,70,478 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 179 உள்ளனர். இவர்களில் 12,04,375 வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 81.6.
அத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக மூத்த அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி 7,21,713 (60 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் 3,21,794 (26.79%) சதவீதம் வாக்குகளை பெற்றார். கிட்டத்தட்ட நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அபார வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர் கோமுகி மணியன் 50,179 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சர்புதீன் 30,246 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
அதிக வாக்குப்பதிவு:கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில், நடைபெற்ற முடிந்துள்ள 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 7,73,526 ஆண் வாக்காளர்கள்; 7,94,927 பெண் வாக்காளர்கள்; 228 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 15,68,681 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் 12,42,597 வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர். வாக்கு சதவீதம் 79.21. தமிழகத்தில் தருமபுரிக்கு அடுத்தபடியாக, அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள தொகுதி கள்ளக்குறிச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள்:இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் மலையரசன், அதிமுக - தேமுதிக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் குமரகுரு, பாஜக - பாமக கூட்டணியில் பாமக வேட்பாளர் தேவதாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் ஜெகதீசன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
திமுக வேட்பாளர் தே.மலையரசன் பொதுத் தேர்தலுக்கு புதியவராவார். அதேபோல, அதிமுக சார்பில் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 3 முறை வென்றவரான ரா.குமரகுரு, முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் நம்பிக்கைக்குரியவரான இவர், தனது சட்டப்பேரவைத் தேர்தல் அனுபவங்களைக் கொண்டு களமிறங்கியுள்ளார்.
குமரகுருவின் பிரச்சார உத்தி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகக் காரணமாக இருந்தது முந்தைய அதிமுக அரசுதான் என்று பிரச்சாரத்தின்போது மறக்காமல் குறிப்பிட்டு வாக்காளர்களை கவரும் வகையில் குமரகுரு வாக்குகளை சேகரித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி, சின்னசேலம் அருகே சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் விலங்கின ஆராய்ச்சி மையம் அமைத்தது உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கூறி பொதுமக்கள் மத்தியில் அவர் வாக்கு சேகரித்தார்.
திமுக வேட்பாளரின் முக்கிய வாக்குறுதி: வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், உளுந்தூர்பேட்டையில் சிப்காட் வளாகம் அமைக்கப்படும்; அதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்பதை முக்கிய வாக்குறுதியாக அளித்து, தொகுதி மக்களின் வாக்குகளை பெற முயன்றா ர்திமுக வேட்பாளர் மலையரசன்.
கள்ளக்குறிச்சியை கைப்பற்றப்போவது யார்?:சேலம் மாவட்டத்தில் இருந்து ஆத்தூரைப் பிரித்து, தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும்,தலைவாசல் தினசரி காய்கறி சந்தையை, கோயம்பேடு வணிக வளாகம் போல தரம் உயர்த்த வேண்டும், சேர்வராயன் மலையில் விளையும் காஃபி, மிளகு, சிறுதானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு உரிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இத்தொகுதி மக்கள் மத்தியில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இத்தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்.பி.யான கௌதம சிகாமணிக்கு இம்முறை மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக திமுக சார்பில் புதுமுகமான மலையரசன் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் குமரகுரு எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரின் ஆசியுடன் களத்தில் உள்ளார். கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இருவரும் முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால், இந்த தொகுதி கூடுதல் கவனம் பெற்றுள்ளது. திமுக -அதிமுக இடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சியை கைப்பற்றி கலக்கப் போவது யார் என்பது வரும் 4 -ஆம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: தேர்தல் 2024:நெல்லையில் அதிமுக, காங்கிரஸ், பாஜக மும்முனை மோதலில் வெற்றி யாருக்கு?