திருவண்ணாமலை:தமிழக அரசு கள்-ளை உணவாக அறிவிக்க வேண்டும் என்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (ஜன. 21) தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்த உள்ளோம் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலையில் கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்பின் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை.
இது உலகளாவிய நடைமுறையாகும். கள்ளுக்கு சிறப்பு சேர்க்கும் காப்பியம் கம்பராமாயணம். ராமருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த உள்ளார்கள். ராமர், சீதை திருமணத்தில் வந்திருந்த விருந்தினர்களுக்கு கள்ளை கொடுத்து உபசரித்திருக்கின்றார்கள். கம்பராமாயனத்தில் இதனை கம்பர் பதிவு செய்திருக்கிறார். அதே போல் கும்பகர்ணன் கள்ளை குடித்துவிட்டு போர்களத்திற்கு சென்றார் என்று பதிவுகள் கூறுகின்றன.
தமிழகத்தில் கள்ளில் கலப்படம் இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டது. மற்ற எந்த மாநிலத்திலும் கள்ளுக்கு தடை கிடையாது. தமிழகத்தில் மட்டும் கள்ளில் கலப்படம் செய்யப்படுவதாக கூறி தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு கள்ளை உணவாக அறிவிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்த உள்ளோம்.