சென்னை:உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நாளை (ஜன.22) நடைபெறுகிறது. இந்நிலையில், கோயில் பிராணப் பிரதிஷ்டை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றி கொண்டாடுவோம் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. நீண்ட நெடிய இந்துக்களின் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்வு கிடைத்தது. பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்த கோயிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சியை ஒட்டி, நாட்டு மக்கள் அனைவரும் குழந்தை ராமனை வரவேற்று தரிசிக்க தயாராகி வருகின்றனர்.
பல மாநிலங்கள் இந்த வரலாற்று நிகழ்விற்காக பொது விடுமுறை அறவித்துள்ளன. பல பெரும் நிறுவனங்கள் கூட விடுமுறை வழங்கி உள்ளன. மடாதிபதிகளும், பல ஆன்மிக பெரியோர்களும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை வரவேற்றுள்ளனர்.
ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியினை வரவேற்கும் விதமாக, தமிழகம் முழுவதும் தங்களது இல்லங்களில் கோலமிட வேண்டும். குடும்பத்துடன் அமர்ந்து ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அனைத்து முக்கிய இடங்களிலும் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பைக் காண மக்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.