தருமபுரி:கடத்தூரில் செயல்பட்டு வந்த இரண்டு அரசு மதுபானக் கடைகளில், ஒரு கடையை மாற்றி ஒசஅள்ளி ஊராட்சியில் வேடியூர் அருகே அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மாலை நேரங்களில் சொந்த ஊருக்கு தனியாக வருகின்றனர்.
இப்பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் மது வாங்குபவர்கள், இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்தி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில், புதியதாக ஒரு கடை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம் தலைமையில், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக மனு அளித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், இப்பகுதியில் மதுபான கடை அமையாது. அவற்றை வேறு இடத்தில் மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (பிப்.19) அப்பகுதியில், மதுபான கடை அமைப்பதற்கான பொருட்கள்களை இறக்கி வைத்துள்ளனர். இதனையறிந்த கிராம மக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம் தலைமையில், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளனர். அப்பொழுது, ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம், காரில் எடுத்து வந்த ஐந்து லிட்டர் டீசலை உடலின் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.