எம்ஜிஆர் பற்றி பேச ஆ.ராசாவிற்கு எந்த தகுதியும் இல்லை தூத்துக்குடி:தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுகவைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் இன்று (பிப்.01) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, பல்லாவரம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணியாற்றி வந்த பட்டியல் இனத்தைச் சார்ந்த பெண்ணின் மீது வன்கொடுமைத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கும் சம்பவத்தைக் கண்டித்தும், வன்கொடுமை தாக்குதலில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு, கண்டன உரையாற்றி பேசுகையில், “திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில், பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் யாரும் வாய் திறக்கவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். திமுகவுக்கு துணை போகும் கட்சிகளை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
7 மாதமாக சிறையில் இருப்பவருக்கு அமைச்சர் பதவி தொடர்வது தமிழகத்தில்தான் உள்ளது. இதை உயர் நீதிமன்றமே சுட்டிக் காட்டி உள்ளது. ஈழத் தமிழர்கள் விஷயத்தில், தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் உடன் திமுகவினர் கூட்டணி வைத்துள்ளனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தவர்தான் ஆ.ராசா. இவருக்கு எம்ஜிஆர் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போறாரு என்பதை மக்கள் மாற்றி, இந்த ஆட்சி வீட்டிற்குப் போனால்தான் தமிழகத்திற்கு விடியல் என கூறுகின்றனர்” என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அதிமுக தொண்டர்கள் ஆ.ராசாவின் உருவப் படத்தை செருப்பால் அடித்தும், தீ வைத்தும் எதிர்ப்பை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், அணிச் செயலாளர்கள் உள்ளிட்டர் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:“சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு!