சென்னை:தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 833 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப் பள்ளிகள், 108 உயர்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 225 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் கள்ளர் பள்ளிகள் என்ற பெயரில் இயங்கி வருகின்றன. மேலும் சுயநிதிப் பள்ளிகள் 10 ஆயிரத்திற்கும் மேல் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்த வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தனது அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அளித்துள்ளார்.
650 பக்கம் கொண்ட அறிக்கையில் 14 அத்தியாயங்களும், 6 இணைப்புகளும் இடம் பெற்றுள்ளன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்க்க வேண்டிய 20 உடனடி பரிந்துரைகளும், 3 நீண்டகாலத்தில் தீர்க்க வேண்டிய பரிந்துரைகளையும் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
- ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் என உள்ள பெயர் பலகையை, அரசுப் பள்ளிகள் என மாற்றம் செய்ய வேண்டும்.
- பள்ளி வளாகத்தில் உள்ள சாதி தொடர்பான பெயர்களை அகற்ற வேண்டும். பள்ளிக்கு நன்கொடை வழங்கி இருந்தாலும் அவர்களின் பெயரையும் அகற்ற வேண்டும்.
- புதியதாக பள்ளிகளை துவக்குவதற்கு அனுமதி அளிக்கும்போது, பள்ளியின் பெயரில் சாதிப்பெயர் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் அளிக்க வேண்டும்.
- ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள பள்ளியில் சாதிப்பெயர்களை அகற்ற கூற வேண்டும். அதற்கு பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொள்ளாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் உள்ள கள்ளர் சீரமைப்புப்பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பழங்குடியினர் நலப்பள்ளிகள் என அனைத்தையும் பள்ளிக் கல்வித்துறைக்கு கீழ் உடனடியாக கொண்டு வர வேண்டும். பள்ளிகளை ஒருங்கிணைத்து பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வு, முன்னுரிமை போன்றவற்றை சரி செய்ய 2 பேர் கொண்ட குழுவையும் அமைக்கலாம்.
- பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகம் உள்ள சாதியினர் இருந்தால் அவர்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
- பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் குறித்த வருடாந்திர அறிக்கை தயார் செய்யப்பட்டு, பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதான செயல்பாடுகள் குறித்து ரகசியமாக வைக்கலாம்.
- அனைத்து வகையான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நடத்தை விதிகள் சட்டப்படி பரிந்துரைக்கப்பட வேண்டும்.
- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது ஆசிரியர்களின் திறமை, சமூகம் குறித்த அவர்களின் அணுகுமுறை நீதி குறித்தும் தேர்வு செய்வதற்கு கண்டறியப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
- அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சமூகப் பிரச்சினைகள், ஜாதிப் பாகுபாடு, பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் தொடர்பான பல்வேறு சட்டங்கள், ராகிங், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்கும் முன், அவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அந்த சட்டங்களை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் கட்டாயம் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க:கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதி இடம் பெற வேண்டாம்: தமிழ்நாடு அரசுக்கு நீதியரசர் சந்துரு குழு பரிந்துரை - justice chandru committee recommend