சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், அவரின் சகோதரர் இருவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கில் அவர் கடந்த ஜூன் 26 தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் என்பவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து, ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க:குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி ஜெயம் ரவி, ஆர்த்தி இடையே ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை!
அப்போது ஆஜரான அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 19ம் தேதி மாலை ஆறு மணியளவில் சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாகவும், ஆனால் அதற்கு முன்பாகவே ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனையடுத்து, மனு நிலுவையில் இருந்த போது எப்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர் உள்பட 12 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஜாபர் சாதிக் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதை உறுதி செய்த அமலாக்கத்துறை ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 55.30 கோடி மதிப்புள்ள சொத்துகளை பண மோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் முடக்கியுள்ளனர். இதில், 14 அசையா சொத்துகள் அடங்கும். மேலும், ஜாகுவார், மெர்சிடிஸ் (Mercedes) உள்ளிட்ட 7 சொகுசு வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.