கரூர்:கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கூடலூர் மேற்கு கிராமம், பெரியதிருமங்கலம் என்னும் ஊரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர், ஜோதிமணி. தனது கல்லூரி காலத்தில், மாணவர் சங்கத் தலைவரில் தொடங்கி, இன்று இந்திய காங்கிரஸில் இணைந்து, இளைஞர் காங்கிரஸில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
முதன்முதலாக இவர், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில், கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கரூர் மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில் பாலாஜியை எதிர்த்து நின்று, 55 ஆயிரத்து 593 வாக்குகள் பெற்று, 44 ஆயிரத்து 145 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திமுக கூட்டணியின்றி தனித்து நின்ற காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நின்ற ஜோதிமணி, 30 ஆயிரத்து 420 வாக்குகள் பெற்று, அதிமுக சார்பில் நான்காவது முறையாக கரூர் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரையிடம், 5 லட்சத்து 8 ஆயிரத்து 708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
தொடர்ந்து, 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், எம்.பியாக நான்கு முறை கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தம்பிதுரையுடன் மீண்டும் போட்டியிட்டார். அப்போது, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் கண்ட ஜோதிமணி, 6 லட்சத்து 95 ஆயிரத்து 697 வாக்குகள் பெற்று, தம்பிதுரையை 4 லட்சத்து 20 ஆயிரத்து 546 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் முறையாக வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினரானார்.