தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே காவல் ஆய்வாளரின், பூட்டிய வீட்டின் கதவை உடைத்த மர்மநபர்கள் 3 கிராம் தங்க தோடு, 6 ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் குறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் சரகம், திருவலஞ்சுழி விஜிபி நகரைச் சோ்ந்தவா் டி.கவிதா. கும்பகோணம் காவல் உட்கோட்டத்தில், காவல் ஆய்வாளராக பணியாற்றிய காவல் ஆய்வாளர் கவிதா, தற்போது காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் காரைக்குடியில் பணியாற்றுவதால், திருவலஞ்சுழி பகுதியில் உள்ள இவரது வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில், இவரது வீட்டின் முன் பக்க கம்பிக் கதவு திறந்து கிடப்பதாக கடந்த 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அக்கம்பக்கத்தினா் கவிதாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலில் பேரில், கவிதா வீட்டுக்குச் சென்று பாா்த்துள்ளார்.
இதில், வீட்டின் கதவு உடைக்கப் பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று பார்த்த நிலையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிய நிலையில் இருந்துள்ளது. மேலும், அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 3 கிராம் தங்கத் தோடுகள், 6 வெள்ளிக் கொலுசுகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.