தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் நகை கொள்ளை.. மிளகாய் பொடி தூவி துணிகரம்! - தஞ்சாவூர் நகை கொள்ளை

Thanjavur jewellery robbery: தஞ்சாவூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நகை வியாபாரிகள் மீது மிளகாய் பொடியை தூவி, 5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Thanjavur jewellery robbery
தஞ்சாவூர் நகை கொள்ளை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 6:53 PM IST

தஞ்சாவூர் நகை கொள்ளை

தஞ்சாவூர்:ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கர்த்தாராம், ஆசுராம் என்ற வெள்ளி நகை வியாபாரிகள், சென்னையில் உள்ள கடையில் மொத்தமாக வெள்ளி நகைகளை வாங்கி தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகைக் கடைகளில் விற்பனை செய்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 8ஆம் தேதி, இரண்டு பைகளில் 12 கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசுகள், வெள்ளி மெட்டி உள்ளிட்ட நகைகளை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள கடைகளில் 5 கிலோ எடை உள்ள நகைகளை விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள 7 கிலோ நகைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு இரவு தஞ்சைக்கு வந்துள்ளனர்.

அப்போது தொப்புள் பிள்ளையார் கோயில் சாலையில் சென்று கொண்டிருந்த வியாபரிகளின் பின்னால், இரண்டு இருசக்கர வாகனத்தில் 6 நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர், ஸ்கூட்டரில் சென்ற வெள்ளி வியாபாரிகள் மீது மிளகாய் பொடியை தூவி உள்ளார். இதில் வெள்ளி வியாபாரிகள் இருவரும் நிலைகுலைந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், நகைகள் இருந்த பையை அவர்களிடமிருந்து பறித்துச் சென்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்களையும் அரிவாளைக் காட்டி மிரட்டிவிட்டு, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வெள்ளி நகை வியாபாரிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் மர்ம நபர்களை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் வேகமாக சென்றதால், வேகத்தடை இருசக்கர வாகனம் சறுக்கிய நிலையில், கொள்ளையர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள், நகைப்பையுடன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து, புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். மேலும், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளி நகைகள் கொள்ளை சம்பவத்தில் 6 மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூபாய் 5.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:“போதைப்பொருள் அதிகமாக இருப்பது குஜராத்தில்தான்”.. அமைச்சர் ரகுபதி தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details