தேனி: பெரியகுளம் வடகரை அரண்மனைத் தெருவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை ஒட்டி அதிமுக சார்பில் நேற்றிரவு (பிப்.25) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்நிலையில், இக்கூட்டத்திற்கு பெரியகுளத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை கூட்டம் சேர்ப்பதற்காக அழைத்து வருவதற்கு, ஒவ்வொருவருக்கும் ரூ.200 தருவதாகக் கூறி அதிமுக கட்சி நிர்வாகிகள் டோக்கன்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கூறியது போலவே நபர் ஒருவருக்கு ரூ.200 தருவார்கள் என எண்ணி, பெரியகுளத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள், ஆண்கள் எனக் குடும்பம் குடும்பமாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்கள், கூட்டம் முடிந்ததும் அதிமுக நிர்வாகிகளால் விநியோகம் செய்யப்பட்ட டோக்கன்களைக் காண்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என நினைத்து, மாலை 5 மணிக்கு ஆரம்பித்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், மாலை 5 மணிக்கு துவங்கிய கூட்டம், இரவு 10 மணிக்கு தான் முடிந்துள்ளது.
இதையடுத்து, கூட்டம் நிறைவுறும் வரை பொறுமை காத்தப் பொதுமக்களுக்கு, கட்சி நிர்வாகிகள் பணம் தராமல் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால், கூட்டத்துக்கு வந்த பொதுமக்கள் ரூ.200 தருவதாகக் கூறி கூட்டத்துக்கு அழைத்து வந்துவிட்டு, கூட்டம் முடிந்தப் பிறகு பணம் தராமல் ஏமாற்றிவிட்டதாக வேதனைத் தெரிவித்துள்ளனர்.