சென்னை:மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா, சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதவமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது.
அப்போது அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அதிமுகவில் விளையாட்டு வீரர்கள் அணி உருவாக்கப்பட்டது.
இதையடுத்து நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக விளையாட்டு வீரர்கள் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது . கிராமம் முதல் நகரத்தில் உள்ள அனைத்து இளைஞர்களை உள்ளடக்கி அவர்களின் செயல் திறமை மற்றும் உடல் வலிமையை அதிகரிக்கவும், இளைஞர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் நோக்கிலும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் மாநிலத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தனர். இன்றைக்கு இருக்கும் ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடப்பதும், சிறுமிகள் முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் வேதனை அளிக்கிறது.
பள்ளி குழந்தைகளுக்கு ஒரு சில ஆசிரியர்கள் செய்கின்ற வன்கொடுமை, ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
செங்கோட்டையன் ஆப்சென்ட்:இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,மூத்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். ஆனால் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
ஆனால் அவர், ஈரோட்டில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அப்போது அவரிடம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "நினைவுநாள் என்றால் சென்னைக்கு சென்றிருப்பேன். பிறந்தநாள் விழா என்பதால் அங்கங்கே இருந்தபடியே நிகழ்வில் கலந்து கொள்ளலாம்." என்றார்.
அண்மை காலமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே முரண்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது பேசுபொருளாக மாறியுள்ளது.