மதுரை: மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஐந்து மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் முருகானந்தம் வீட்டின் அருகிலேயே முடி திருத்தகம் நடத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வசந்தா ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற கோழி குமாரிடம் தன்னுடைய சொந்த வீட்டை அடமானமாக வைத்து ரூபாய் பத்து லட்சம் வட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்தா தானது வீட்டை அடமானமாக வைத்து பெற்ற பணத்தை முழுமையாக செலுத்தி விடுவதாகவும், அதனால் அடமான கடன் பத்திரத்தை ரத்து செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோழி குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால், வசந்தா கோரியதற்கு மாறாக கோழி குமார் ரூ.15 லட்சம் தருவதாகவும் அதற்கு ஈடாக வீட்டை முழுவதும் கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், அந்த வீட்டை எழுதிக் கேட்டு கோழி குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான கணேசன் என்ற வாய் கணேசன், முத்து என்ற புரோக்கர் முத்து ஆகிய மூன்று பேரும் வசந்தாவை தாக்கி மிரட்டியதாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் மே 7ஆம் தேதி வசந்த புகார் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து, வசந்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் கோழி குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் மீதும் ஜெய்ஹிந்த்ரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.