சென்னை: கடந்த 15ஆம் தேதி டெல்லியில் விலை உயர்ந்த 50 கிலோ போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிஃபர் ரகுமான், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூவர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணை விசாரணையில், கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருட்களை தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக் கூறி கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் இந்த போதைப்பொருள் கடத்தலின் மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுகவின் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பதும் அவரின் சகோதரர்களான மொய்தீன், சலீம் ஆகியோருடன் இணைந்து போதைப்பொருட்களை தொடர்ந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை மண்டல போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் தலைமறைவாகியுள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் மொய்தீன், சலீம் ஆகியோரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரின் சகோதரர்கள் வீட்டிற்கு சென்ற மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து நோட்டீஸ் ஒன்று ஒட்டி, சீல் வைத்து விட்டு சென்றனர். மேலும் ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாத வகையில், இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளனர்.