சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, இன்று (வியாழக்கிழமை) மாலை ஜாபர் சாதிக்கை அவரது மனைவி ஆமீனா, தாயார் சம்சாத் பேகம் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
முன்னதாக, குடும்பத்தினரை ஒரு மணி நேரம் சந்தித்து பேச சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் அடிப்படையில், ஜாபர் சாதிக் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து பேசியுள்ளார். இதனிடையே, ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், ஜாபர் சாதிக்கிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அளித்த நாட்கள் நாளையுடன் முடிவடைகிறது. அந்த வகையில், நாளை மதியம் அல்லது மாலை மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்!