தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழைய ஓய்வூதிய திட்டம் எப்போ தான் வரும்? மீண்டும் போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ! - OLD PENSION SCHEME

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளது

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பு
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பு (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2025, 9:34 PM IST

Updated : Jan 28, 2025, 3:18 PM IST

சென்னை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் கூட்டம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வரக்கூடிய நிலையில், மீண்டும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.மயில், செல்வராஜ் , பொன்னி வளவன் தலைமையிலான நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், "ஜாக்டோ ஜியோ அமைப்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியருக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பு (ETV Bharat Tamilnadu)

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது. இது கண்டனத்துக்குரியது.

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக பழைய ஓய்வூதிய திட்டத்தை தான் செயல்படுத்த வேண்டும். அதை விடுத்து வேறொரு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதை ஏற்க முடியாது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறி இருந்தது. ஆனால் அப்படி செய்யாமல் ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது தமிழக அரசு.

8 லட்சம் காலிப் பணியிடங்கள்:ஆகவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் ஆசிரியர்களுக்கான ஊதிய வேறுபாடு களையப்படவில்லை. சரண் விடுப்பு கொண்டுவரப்படவில்லை. காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இளைஞர்கள் வேலைக்காக காத்து கிடக்கின்றனர். தமிழ்நாட்டில் அரசு துறைகளில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன." என்று அவர்கள் கூறினர்.

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேலும் கூறும்போது, "கடந்த காலங்களில் நாங்கள் போராட்டங்களை அறிவித்து போராடும் நிலையில் எங்களை அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கை வார்த்தைகளை கூறுவார்கள். அதனை நம்பி நாங்களும் இருந்தோம். குறிப்பாக ஆட்சிக்கு வந்ததும் நிதி நிலைமை சரியில்லை என எடுத்து கூறினார்கள். அதனை ஏற்று இவ்வளவு நாள் காத்திருந்தோம். தற்போது நான்கு ஆண்டுகள் கடந்தும் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் ஏமாற்றபட்டுள்ளோம்.

ஆகவே ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்த உள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதனை தொடர்ந்து பிப்ரவரி 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். அப்போதும் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்.

ஜாக்டோ ஜியோ வலுவான அமைப்பாக இருக்கிறது. எங்களுடைய போராட்டம் என்பது தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும். ஒற்றுமையாக இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கிறோம். 32 ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் இணைந்து ஆலோசனை நடத்தி இருக்கிறோம். தொடர்ந்து போராட்டத்தை ஒருங்கிணைப்பது குறித்து திருச்சியிலும், அதன் பிறகு மாவட்ட அளவிலும் ஆலோசனை நடத்த உள்ளோம்." என்று அவர்கள் தெரிவித்தனர்.

1.4.2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.

காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

Last Updated : Jan 28, 2025, 3:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details