சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை மையத்தை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் கண்டியப்பேரி அரசு புறநகர் மருத்துவமனை கட்டிடம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரக்கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அரசு மருத்துவமனை கட்டிடங்களையும் திறந்து வைத்தும், 1196 செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கோடைக் காலம் துவங்கி இருக்கிற காரணத்தினால் கடுமையான வெப்ப அலை பாதிப்புகளைத் தடுப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கின்ற அறிவுறுத்தலும் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
உடலில் நீர்ச் சத்து குறையாமல் இந்த கோடைக் காலத்தில் உடலில் உள்ள நீரின் அளவை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும். எனவே, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கத் தேவையான அளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரைத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும். ORS எலுமிச்சை சாறு, இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளைக் குடித்தல் போன்ற அறிவுறுத்தலும் பொதுமக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பருவ கால பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை வெளியில் தேவையில்லாமல் வருவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
வெளியில் செல்லும்போது காலனிகள் இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். கடுமையான வெயில் தாக்கம் இருக்கின்ற சமயங்களில் கைகளில் குடைகளோடு எடுத்துச் செல்ல வேண்டும். சிறிய குழந்தைகள் மதிய வேளையில் வீட்டுக்கு வெளியில் விளையாட பெற்றோர்கள் அனுப்ப வேண்டாம்.
குறிப்பாகப் பெரிய சுற்றுலா மையங்களில் செயற்கை குளிர் பானங்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் ஈடுபட்டிருப்பவர்கள் கோடைக் காலத்தில் இந்த பழக்கங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது என்ற அறிவுறுத்தலை பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.