சென்னை:சென்னையில் இருந்து நெல்லை செல்லும் விரைவு ரயிலில் கடந்த வாரம் தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் உள்ளிட்டோர் இணைந்து அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரயிலில் சந்தேகத்திற்கிடமாக இருந்த மூன்று நபர்களின் பைகளில் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஓட்டலில் இருந்து கொண்டுவரப்பட்ட பணம் என தெரிவித்தனர்.
மேலும், போலீசார் கைது செய்தவர்களில் இரண்டு பேர், சம்மந்தப்பட்ட ஓட்டலின் ஊழியர்கள் என்பதும் ஒருவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காவல் துறையினர்கள் இணைந்து நயினார் நாகேந்திரன் தொடர்புடைய ஓட்டல் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தினர்.
இதுமட்டும் அல்லாது, கைப்பற்றப்பட்ட பணம் அபிராமிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசுமை வழிச் சாலையில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் இருந்து பணம் கை மாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி கட்டிடத்தின் உரிமையாளர் பாஜக மாநில தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்தன் எனக் கூறப்பட்ட நிலையில், அங்கு சோதனை மேற் கொண்ட தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஒரு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரணை நடத்துவதற்குத் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் பாஜக நிர்வாகி கோவர்தனுக்கு சம்மன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது? யாருக்காகக் கொடுக்கப்பட்டது? எங்கிருந்து பெறப்பட்டது? என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக நிர்மலா சீதாராமண் பேரணி!