தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 கோடி ரூபாய் போனஸாக கொடுத்து ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய கோவை ஐ.டி. நிறுவனம்! - KOVAI IT COMPANY BONUS

கோவையில் இயங்கிவரும் ஓர் ஐ.டி.நிறுவனம் ரூ.14.5 கோடியை போனஸாக வழங்கி தமது ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட போனஸ்
ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட போனஸ் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2025, 8:30 PM IST

கோயம்புத்தூர்:கோவை அவினாசி சாலை நவ இந்தியா பகுதியை தலைமையிடமாகக் கொண்டு கோவை.கோ என்ற ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இங்கிலாந்து மற்றும் சென்னையிலும் கிளை அலுவலகங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தில் சுமார் 260 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களது நிறுவனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்கள் 140 பேருக்கு மொத்தமாக ரூ. 14.5 கோடியை போனஸாக அறிவித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்நிறுவன நிர்வாகம்.

'ஒன்றாக நாம் வளர்கிறோம்' என்ற திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு இந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களும், மூன்று ஆண்டுகள் சேவையை முடித்தவுடன், அவர்களின் மொத்த ஆண்டு சம்பளத்தில் 50% போனஸாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி முதல்கட்டமாக 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது ஜனவரி மாத ஊதியத்துடன் போனஸைப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் சரவணக்குமார் கூறுகையில், "நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், லாபத்திற்கும் பங்களிக்கும் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். ஊழியர்களுடன் நிறுவனத்தின் செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளை கண்டுபிடிப்பது என் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.

இதையும் படிங்க: சாம்சங் ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்: தொழிலாளர்கள் 'திடீர்' உள்ளிருப்பு போராட்டம்! - SAMSUNG PROTEST

நாங்கள் ஊழியர்களை வெகுமதிப்படுத்தும் முறைகளை ஆராயும்போது, முதலில் பங்கு உரிமைத் திட்டங்கள் அல்லது பங்குகளை வழங்கும் வாய்ப்புகளைக் கருதியிருந்தோம். ஆனால், அவை காகிதப் பணமாக இருக்கும். அவை ஊழியர்களுக்கு உண்மையான பலனை அளிக்க வேண்டுமெனில், நிறுவனம் வெளிப்படை முதலீடு திரட்ட வேண்டும் அல்லது பங்குகளைப் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இதனால், நாங்கள் பணமாகவே போனஸை வழங்கத் தீர்மானித்தோம்.

எங்கள் பணியாளர்கள் அதை தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். வங்கிக் கடனை அடைப்பதற்கும், வீடு வாங்க முன்பணம் செலுத்துவதற்கும் அல்லது அவர்களின் தேவைக்கேற்ப முதலீடு செய்யவும் இதனை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்." என்று பெருமிதத்துடன் தெரிவித்தார் சரவணக்குமார்.

இதுகுறித்து இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கூறுகையில், "நாங்கள் பணியாற்றும் நிறுவனம் எங்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக போனஸ் வழங்கி உள்ளது. வெளி மாநிலங்களில் தான் இவ்வாறு வழங்குகிறார்கள் என்று கேள்விப்பட்ட நிலையில், எங்களுக்கும் இந்த மாதிரியான போனஸ் வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது நிறுவன வளர்ச்சிக்காக மென்மேலும் கூடுதலாக பணி செய்ய போகிறோம்." என்று அவர்கள் தெரிவித்தனர்.

கோவை.கோ நிறுவனம், 2023 ஆம் ஆண்டில் 16 மில்லியன் டாலர் ஆண்டு வருவாய் ஈட்டியுள்ளதும், பெங்களூரை தளமாகக் கொண்ட Floik என்ற நிறுவனத்தை சமீபத்தில் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது

ABOUT THE AUTHOR

...view details