மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரங்கக்குடி காயிதே மில்லத் தெருவில் வசித்து வருபவர் ஹிதயத்துல்லா (வயது 76). இவருக்கு 4 மகன்கள் உள்ள நிலையில் நான்கு பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது மூன்றாவது மகன் ரிஸ்வானுக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த இப்ராஹிம் மகள் ரமீஸ்பர்வீன் என்பவருடன் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ரிஸ்வான் - ரமீஸ்பர்வீன் இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் அமெரிக்கா நாட்டின் முறைப்படி அங்குள்ள நீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். இதில் ரமீஸ்பர்வீனுக்கு ஜீவனாம்சமாக 50 ஆயிரம் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் 42 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த மே மாதம் 8ஆம் தேதியன்று அரங்ககுடியில் உள்ள ஜமாத்தார்கள் முன்னிலையில் இருவருக்கும் விவகாரத்து கொடுக்கப்பட்டது.
இஸ்லாமிய முறைப்படி நீடூரில் பத்வாவும் வாங்கிவிட்டனர். ரமீஸ் பர்வீனுக்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட 40 பவுன் நகை அவரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரமீஸ் பர்வீனுக்கு ஆதரவாக மயிலாடுதுறை அருகே நீடூரில் வசிக்கும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கண்காணிப்பில் இருந்து வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் எனக் கூறப்படும் இக்காமா சாதிக் பாட்ஷா, ரிஸ்வான் தந்தை ஹிதயத்துல்லாவை கடந்த 16ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
அவரிடம் இக்காமா சாதிக் பாட்ஷா 2 கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் முட்டி போட வைத்து பணத்தை பெறுவேன் என்றும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஹிதயத்துல்லா அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், இக்காமா சாதிக் பாட்ஷா மற்றும் அவரது நண்பரான மயிலாப்பூரை சேர்ந்த ஐயூப்கான் ஆகிய இருவரை கைது செய்தனர்.