சென்னை:ஈஷா யோகா மையம் நடத்தும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
ஈஷா யோகா மையம் வரும் 26, 27ஆம் தேதி தேதிகளில் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது என கோவையை சேர்ந்த சிவஞானம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா மையம் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நிகழ்ச்சி நடத்தி வருகிறது. மகாசிவராத்திரியின் போது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் அங்கு கூடுகின்றனர். இதனால் வெள்ளியங்கிரியின் வனச்சூழல் பாதிக்கப்படுகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி நிகழ்வில் 7 லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடினர். இதனால் ஏற்பட்ட கழிவு நீர் அதிகளவில் வனப்பகுதிகளில் வெளியேற்றப்பட்டது. எனவே, வனப்பகுதியின் சூழல் சீர்கேடு நேரிட்டதோடு மட்டுமல்லால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, 26,27 ஆம் தேதிகளில் மகாசிவராத்திரி நிகழ்ச்சி நடத்த ஈஷாவுக்கு அனுமதி வழங்க கூடாது,"என குறிப்பிட்டிருந்தார்.
அவரது மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், என். ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "எந்த விதிகளையும் கடைபிடிக்காமல் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது,"என்றார்.