புதுடெல்லி:ஈஷா யோகா மையத்தில் பெண்கள் இருவர் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள இது தொடர்பான வழக்கில் மேலும் விசாரணை மேற்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு தொடர்ந்த தந்தை:கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் தமது 39 வயது மகள், 42 வயதான மகள் இருவரும் அவர்கள் விருப்பத்துக்கு மாறாக ஈஷா மையத்தில் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு போலீஸார் இது குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், இரண்டு பெண்களும் தங்களது விருப்பத்தின் பேரில் ஈசா ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், தங்களது தந்தை கூறுவது உண்மை அல்ல என்று தெரிவித்திருந்தாக கூறப்பட்டிருந்தது. தாங்கள் விரும்பியே இந்த துறவு பாதையை தேர்ந்தெடுத்தாக பெண்கள் கூறியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை:இந்த நிலையில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாகவே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த இரண்டு பெண்களிடமும் நீதிபதிகள் பேசினர். அப்போது அந்த பெண்கள், தாங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஈஷா ஆசிரமத்தில் தங்கி இருப்பதாகவும், ஆசிரமத்தில் இருந்து வரும் எண்ணம் இல்லை என்றும் கூறினர்.
இதையும் படிங்க :ஈஷா மைய வளாகத்தில் தகன மேடை? - உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு போலீசாரின் அறிக்கையை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி,"ஈஷா பவுண்டேஷன் ஆசிரமத்தில் பெண்கள் இருவரும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது எந்த ஆதாரமும் இல்லை என்பது தெரிகிறது. எனவே இந்த ஆட்கொணர்வு மனு வழக்கை முடித்து வைப்பது," என நீதிமன்றம் தீர்மானித்திருக்கிறது என்று கூறினார்.
மாநில அரசு விசாரணைக்கு தடை இல்லை:அதே நேரத்தில், ஆட்கொணர்வு மனு மீது மேல் விசாரணை தேவையில்லை என்று கருவதாக கூறிய உச்ச நீதிமன்றம். சட்டப்படி இந்த விஷயத்தில் மாநில அரசு விசாரணை மேற்கொள்வதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என்றும் தெரிவித்தது.
பெண்கள், குழந்தைகள் குறித்த புகார்கள் குறித்து விசாரிக்க ஈஷா மையத்தில் புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என்று போலீசாரின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "இந்த யோசனை யார் மீதும் தவறான நோக்கத்தில் கூறப்பட்டதல்ல. சில மதசார்ப்பற்ற இணக்கமான விஷயங்கள் தேவைப்படுகிறது. அது போன்ற குழு இல்லாவிட்டால், அவர்கள் அதனை ஏற்படுத்த சொல்லுங்கள்," என்று கூறினர்.
இந்த வழக்கு விசாரணையின் போது தந்தையின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சில விஷயங்களை தாக்கல் செய்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "அவரது குழந்தைகள் இருவரும் வளர்ந்து விட்டனர். அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் வகையில் நீங்கள் புகார் தாக்கல் செய்ய முடியாது. இது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருக்கும் வழக்கு அல்ல. தந்தை என்ற வகையில் அவருக்கு வேதனையாக இருக்கலாம். ஆனால், அவர்கள் மேஜர் ஆகிவிட்டனர்," என்றார்.
இதனைத் தொடர்ந்து ஈஷா பவுண்டேஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "முறைப்படுத்தும் விஷயங்கள் தேவையெனில் அதற்கு இணக்கமாக செயல்படுவோம்," என தெரிவிக்கப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்