சென்னை:கோவை ஈஷா மையத்தில் காலபைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கும் பணிகளை ஈஷா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இக்கரை போளுவாம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவரின் பரிந்துரை அடிப்படையில், தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மின் தகன மேடை கட்டுமானத்தை அகற்றக் கோரியும், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அமைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டி கிராமம், யானைகள் வாழ்விடமாக உள்ளது. மின் தகன மேடை அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஏதும் நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் தகன மேடை அமைக்கும் பகுதிக்கு அருகில் குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. சட்டப்படி குடியிருப்புக்கள் மற்றும் நீர்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 90 மீட்டர் தூரத்துக்கு அப்பால் தான் மயானங்கள் அமைக்கப்பட வேண்டும். இதை மீறும் வகையில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை அமைக்கப்படுகிறது எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மின் தகன மேடை அமைக்கப்பட்டால், அதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும் எனவும், அப்பகுதியில் இருந்து தங்களை துரத்தும் நோக்கிலேயே இந்த மின் தகன மேடை அமைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.