சென்னை:பாலியல் வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிடுவது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பான ஒன்று இதன் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து வெளியிட்ட நபர்கள் குறித்து விசாரணை கொண்டு வருகின்றனர் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
20 வழக்குகள் நிலுவை:சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் அருண், "அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியும் பேராசிரியரும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தகவல் அறிக்கை என்பது பாதிக்கப்பட்ட நபர் அளிக்கக்கூடிய தரவுகள் அனைத்தும் அடங்கியதாக இருக்க வேண்டும்.
புகாரின் பேரில் கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் விசாரணை மேற்கொண்டோம். விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை திரட்டி இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை 25ஆம் தேதி காலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஞானசேகரிடம் விசாரணைகள் மேற்கொண்டு பின்னர் பாலியல் வழக்கு தொடர்பான குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதி செய்த பின்னர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தோம்.கைது செய்யப்பட்ட ஞானசேகர் மீது 2013 ஆண்டு முதல் ரவுடித்தனம் குறித்த 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஞானசேகர் ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரியவந்துள்ளது.
புகார் பெற நடவடிக்கை:இதுபோன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையானது வெளியில் வரக்கூடாது அப்படி வெளியில் வந்தால் அது சட்டப்படி குற்றமாகும். அதேபோல் அப்படி வெளியாகிய முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் விவாதிப்பதும் சட்டப்படி குற்றமாகும். அதன்படி முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட நபர்களை கண்டறிய கோர்ட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளோம். பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளின் தகவல்களை வெளியிடக்கூடாது என்பது சட்டமாக உள்ளது.
ஞானசேகர் மீது பதியப்பட்டுள்ள இருபது வழக்குகளில் 6 வழக்குகள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் மீதமுள்ள வழக்குகள் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு பொறுத்தவரையில் ஞானசேகரிடம் வேற எந்த ஒரு பெண்களும் பாதிப்படைந்ததாக காவல் நிலையத்தில் இதுவரை புகார் எதுவும் தரவில்லை. மாறாக ஞானசேகரிடம் மேற்கொள்ள உள்ள விசாரணையில் அவரது அலைபேசிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு அப்படி பெண்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் அவர்களிடம் புகார் பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.