சென்னை:சென்னை ஐஐடியில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் 9வது மாநாடு, வருகிற மே 20 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் 25 பயிற்சி பட்டறைகள், 70 கலைகளைச் சார்ந்த கலைஞர்கள், வல்லுநர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் பங்கேற்போர் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், நெறிமுறைகள் ஆகியவற்றின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், சிறந்த கலைஞர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பங்கேற்போருக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது.
இது குறித்து சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறும்போது, “9வது ஆண்டாக நடைபெறும் இம்மாநாட்டை சென்னை ஐஐடி ஏற்கனவே 1996, 2014 ஆகிய இரு ஆண்டுகளில் நடத்தியுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக சென்னை ஐஐடியில் நடைபெற உள்ளது. 250 கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். 1500 பேர் வரை வெளிநாட்டு மாணவர்கள் இதில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள முக்கிய சிறந்த கலைஞர்கள் பங்கேற்கின்றனர். 26 பயிற்சி அரங்குகள் நடத்தப்பட உள்ளது. இசை மட்டுமின்றி இந்திய கலாச்சாரத்தை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடக்க உள்ளது. காந்தியின் படம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. பொம்மலாட்டம், நடனம் உள்ளிட்டவையும் உள்ளது. சிக்கிம், மேற்கு வங்காளம் சார்ந்த புதுமையான சிறப்பான அரிதான இசைகள் கொண்டு வரப்பட உள்ளன.