சேலம்:சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மலையாளப்பட்டி என்ற கிராமத்தில் வாலிபர் வல்லரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக வாழப்பாடி போலீசாருக்கு இரண்டு நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து வாழப்பாடி போலீசார் , இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு முதற்கட்ட விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த பெண் மயிலாடுதுறையைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி சுகுணா என்பது தெரிய வந்தது.
சுகுணாவிற்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சுகுணாவின் கணவருக்குத் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவனைப் பிரிந்த சுகுணாவை, வல்லரசு திருமணம் செய்வதாகக் கூறி மலையாளபட்டிக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த வல்லரசு சுகுணாவைக் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.